நீயும்... நானும்! - கோபிநாத் (Apr 21)

நன்றி : ஆனந்த விகடன்


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம். ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் கலந்துகொள்ளப் போயிருந்தேன். Dating Harbour என்று ஓர் அழகான இடம். ஒரு பக்கம் படகுகள் சீறும்... மறு பக்கம் ஹோட்டல்களில் கேளிக்கைகள் களைகட்டும்.
நம் ஊர் கோயில் குளத்தில் இருக்கிற படிக்கட்டுகள் மாதிரி அங்கும் படிக்கட்டுகள் நிறைய இருக்கும். ஜோடி ஜோடியாக, குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் உட்கார்ந்திருப்பார்கள்.
ஒருநாள் மாலை நான்கு மணி இருக்கும் கருத்தரங்குக் கூடத்தில் இருந்து வெளியே வந்து அந்தப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தேன். சரியான குளிர். ஐந்து நிமிடங்கள் இருக்கும், அழகான வெள்ளைக்காரப் பெண் வந்து அமர்ந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். நானும் ஒரு ஹலோ சொன்னேன். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது எங்கிருந்தோ ஓடி வந்த ஓர் இளைஞன், என் அருகில் இருந்த பெண்ணை இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டான். மிக நீண்ட முத்தம். அவளைக் கட்டி அணைத்தான். இருவரும் இறுகத் தழுவிக்கொண்டனர்.
அருகில் நான் இருப்பதையோ, அங்கு நிறையக் கூட்டம் இருப்பதையோ அவன் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகுதான் கவனித்தேன். நடந்து போகிறவர்கள், அமர்ந்து இருப்பவர்கள் என எல்லாருமே இறுக அணைத்தபடி, தடவிக்கொடுத்தபடி இருந்தார்கள்.
'என்ன ஊருடா இது... விவஸ்தை கெட்டவனுங்க' என்று கோபம் எனக்கு. அரை மணி நேரம் கழித்து கருத்தரங்கில் என்னோடு பங்கேற்ற ஆஸ்திரேலிய நண்பன் வந்தான். அவனிடம், இருந்த கோபத்தை எல்லாம் கொட்டினேன், 'என்ன கலாசாரம் இது? ஆணும் பெண்ணும் இப்படி அணைத்துக்கொண்டு திரிகிறார்கள். இதைப் பார்த்து எங்கள் மக்களும் கெட்டுப்போகிறார்கள்' என்றேன்.
அவன் என்னிடம், 'உங்கள் ஊரில் ஆண், பெண் உறவின் கலாசாரம் என்ன?' என்றான். நான் மௌனமாக இருந்தேன். 'பெண்ணை நேசிப்பதும், அவளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் நல்ல கலாசாரம்தானே' என்றான். 'ஆமாம்' என்று தலையாட்டினேன்.

'அதைத்தான் இவர்களும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதழோடு இதழ் பதிப்பது முத்தம் பரிமாறுதல் மட்டுமல்ல. வெப்பத்தைப் பரிமாறுதலும்தான். உடல்ரீதியாகத் தன்னைவிட மென்மையான பெண்ணை அணைத்து அவளுக்குத் தடவிக்கொடுத்து வெப்பத்தை அவள் உடலுக்குத் தருகிறான்.' இந்த விஷயத்தை அவன் சொன்ன போது குளிர் நான்கு டிகிரியாக இருந்தது. எனக்கும் உடம்பு நடுங்கியது.
'பெண்களை மட்டுமல்ல... குழந்தைகளையும் அணைத்துக்கொண்டும், தடவிக்கொடுத்துக்கொண்டும் இருப்பதைக் கவனியுங்கள் . இது குளிர்ப் பிரதேசம்... இங்கே அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிற முறை இது. இதை 38 டிகிரி வெப்பத்தில் நீங்கள் செய்தால் அது உங்கள் முட்டாள்தனம். அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது' என்றான். எனக்குப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.
அதென்னவோ தெரியவில்லை. நம்மைவிடப் பலசாலியாக நம்பும் யார் செய்கிற காரியமும் சரி என்றே நமக்குத் தோன்றுகிறது. நம் சொந்த அடையாளம், நம் அபிப்ராயங்கள் எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்துவிட்டு, அடுத்தவருடைய ஷூவுக்குள் அடைந்துகொள்வதில் பேரானந்தம்.
குறைபாடுகளை ஒளித்துவைத்துக்கொண்டு, வெளிப்படுத்துகிற முகமும் பேச்சும் பொய்யானவை. நீங்கள் நீங்களாக வெளிப்படும்போதுதான் ஆரோக்கியமான தோழமை அமைகிறது. அந்த தோழமைக்குள் அழகியல் என்ற அம்சத்தைத் தாண்டி அறிவுப் பகிர்தல் நடக்கிறது.
எதிர்பாலின நட்பு, ஈர்ப்பு தொடர்பானதும்தான் என்றாலும், அடுத்த தலைமுறைக்குள் அதிகமான அறிவுப் பகிர்தல் நடக்க, பாசாங்குகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது ஆண்-பெண் நட்பு குறித்தது மட்டுமல்ல... தேசத்தின் வளர்ச்சி தொடர்பானதும் ஆகும்.
எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார் என்ற தொனியில் எதிர்பாலின நண்பரோடு அறிவியல், அரசியல், சமூகம், உலக வரலாறு என்று பல்வேறு விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. ஆனால், இவை பெரும்பாலும் நான் எவ்வளவு தகவல்கள் தெரிந்துவைத்திருக்கிறேன் பார் என்ற 'நிரூபிக்கும்' தோரணையாகவே நடக்கிறது. இந்த அலங்காரங்களைக் கழற்றிவைத்துவிட்டு 'கருத்துப் பரிமாற்றம்' என்ற அளவில் நடைபெறுவது குறைவுதான்.
பெண் தோழிக்குப் பிடித்த மாதிரி உடை அணிந்துகொள்வது, அருகில் வரும்போது ஆங்கிலம் பேசுவது, பிறந்த நாளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவது, தினமும் காலையில் Good morning Sms அனுப்புவது, ஏதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் போய் உதவுவது, கவிதைப் புத்தகங்கள் பரிமாறிக்கொள்வது இந்த எல்லாப் பரிவர்த்தனைகளும் அழகானதுதான்.
இந்த ஈர்ப்பு எல்லையைத் தாண்டி, வெறும் சென்ட்டிமென்ட் நட்புறவைத் தாண்டி நீயும், நானும் அறிவுள்ள இரண்டு மூளைகள் என்ற அளவுகோலிலும் நட்பு அளக்கப்பட வேண்டும்.
ஆண்-பெண் தோழமையை இந்தியச் சமூகம் சந்தேகத்தோடுதான் பார்க்கிறது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், போலியான எந்த வெளிப்பாடுகளையும் சமூகம் சந்தேகத்தோடுதான் கவனிக்கிறது. உலகம் முழுவதும் அப்படித்தான்.
ஆண்-பெண் தோழமை மிகவும் அற்புதமான, தேசிய விருத்திக்கான ஒரு நட்புறவு. இந்தத் தோழமையில் வெளிப்படுகிற உடல் மொழி, பேச்சு, தொடுதல் இவை அனைத்தும் அந்தத் தோழமை எவ்வளவு யதார்த்தமானது என்பதைச் சொல்லிவிடுகிறது.
இந்தியச் சமூகத்தின் அழுக்குப் படிந்த பழைய கட்டுக்கோப்புகளை நான் உடைக்கிறேன் என்ற மனோபாவத்திலோ, நான் ரொம்ப மாடர்ன் என்ற அளவிலோ, எதிர்பாலினத் தோழமை என்பது ஸ்டேட்டஸ் சிம்பல் என்ற உணர்வோடோ இயங்குகிற தோழமைக்குள் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை.
இயக்குநர் கரு.பழனியப்பன் 'நீயா... நானா' நிகழ்ச்சியில் ஒரு முறை சொன்னார், 'என் தந்தையிடம் எதையெல்லாம் சொல்ல முடிகிறதோ, அதெல்லாம் சரி. அவரிடம் நான் எதை மறைக்க முயல்கிறேனோ, அது தவறு' என்று.
உங்கள் எதிர்பாலினத் தோழமை குறித்து இயல்பாக உங்கள் வீட்டில் சொல்ல மனசு இடம் கொடுத்தால் அந்த நட்புக்குள் ஈர்ப்பைத் தாண்டிய அறிவுப் பகிர்தல் அவசியம் நடக்கும்.
நாகரிகம், உறவு பேணுதல், வசீகரித்தல், புனைவுகள் இன்றி நடந்துகொள்ளல், தன்மையாகப் பேசுதல், இடங்கண்டு செயல்படுதல் போன்றவற்றை வேறு யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடிகள் நமக்கு இல்லை.
அந்தப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் நமக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.
அற்புதமான ஆண்-பெண் தோழமைஅறிவுப் பகிர்தலோடு நடக்கட்டும்!

2 comments:

Anonymous said...

really nice................everyone must have awareness about this

Tamilthotil said...

நாகரிகம், உறவு பேணுதல், வசீகரித்தல், புனைவுகள் இன்றி நடந்துகொள்ளல், தன்மையாகப் பேசுதல், இடங்கண்டு செயல்படுதல் போன்றவற்றை வேறு யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடிகள் நமக்கு இல்லை.
அந்தப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் நமக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.
அற்புதமான ஆண்-பெண் தோழமைஅறிவுப் பகிர்தலோடு நடக்கட்டும்!


முற்றிலும் உண்மை. அருமையான பதிவு.