நீயா? அவளா?

காற்று மட்டும் புகக்கூடியவாறு,
கடற்கரையில் நாம் அமர்ந்த வேளையில்
உன் துப்பட்டா கொடுத்த ஸ்பரிசத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

நான் சவரம் செய்யும் போது,
உன் கண்ணம் கொண்டு
என் கண்ணம் உரசிய சுகத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

காலையில் நீ எழுந்து என்னை உசுப்ப,
உன் இதழ்கள் கொடுத்த
முத்தத்தின் புதுமையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

திருநீறு என் நெற்றியில் இட்டு விட்டு,
பிசிறூதி உன் மூச்சுக்காற்று
பரப்பிய பரவசத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

அமைதியான நீண்ட ரயில் பயணத்தில்,
அருகருகே அமர்ந்தாலும், உன் இதயத்தில் நானும்
என் இதயத்தில் நீயுமிருந்து நம் பகிர்ந்த இனிமையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்தில் இறங்கி
கால் நனைக்க, என் கரத்தை உன் கரத்தால்
இறுகப் பிடித்துத் தந்த நம்பிக்கையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

என் ஒவ்வொரு பெரு வெற்றிக்குப் பின்னும்
உன்னைத் தனியே சந்திக்கும் முதல் பொழுது
நீ என் நெற்றியில் கொடுக்கும் முத்தப்பரிசின் ஊக்கதை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

என் ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும்
என் அடுத்த வெற்றி வரை
எனக்கு நீ அளிக்கும் ஆதரவை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

நம் சிறு சிறு ஊடல்களுக்கும் பிறகு
நாம் சிந்தும் கண்ணீர்
தரும் ஆற்றுதலை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

ஆனால், அவள் உன்னிடம்
தோற்று விட்டாள்...
வேறு யாருமல்ல அவள்
உன் தோழியாகிய 'காமம்' தான்.