சக்தி மனசுல பாலா (பகுதி I)

                
                   இன்னிக்கு சக்திகிட்ட பேசிட வேண்டியதுதான்னு நினச்சுட்டு இருந்தாள் பாலா. ரெண்டுபேருக்கும் கல்யாணம் நடந்து 8 மாசம் இருக்கும்.  அவன்கிட்ட பேசணும். ஆனா என்ன பேசணும், எப்படி பேசணும், எதுக்காக பேசணும் இதுக்கெல்லாம் பாலா கிட்ட பதில் இல்ல.
                    பாலாக்கும் சக்திக்கும் வீட்ல பாத்து முடிச்ச ஏற்பாட்டுக் கல்யாணம். அதுவும், பாலாக்கு பையன் தேட ஆரம்பிச்ச போது கூட, அவ இப்ப கல்யாணம் வேணாம்னு சொன்னதால, அவளோட அப்பா அம்மா ரெடியா பச்சைக்கொடி காட்ட தயார இருந்தாங்க, ஒருவேள அவ யாரையாவது மனசில நினைச்சிருந்தாள்னா.

                    ஆனா அவளுக்கு காதல் கல்யாணம் மேல விருப்பமே இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற நேசம் தான் உண்மையானதுன்னு ரொம்ப நம்பினாள்.
சும்மா கிடையாது பாலா. பாக்க எளிமையான அழகி. அப்படி இருந்தாலே பிரச்சனை தான் பெண்களுக்கு. பல ப்ரோபோசல்ஸ். ஆனா, அவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணின பசங்களால இனிமே எந்தப் பொண்ணு கிட்டயும் ப்ரொபோஸ் பண்ண நினைக்க முடியாதபடி , எதாச்சும் பெரிய ரெஸ்டாரன்ட் கூப்டு போய் லேச்சர் குடுப்பா பாருங்க. இது எல்லாம் தெரிஞ்ச பசங்களுக்கு தான். பர்ஸ்ட் டைம் பாக்கிற தெரியாதவங்களுக்கு ரியாக்சனே வேற.

                    அவளுக்கும் ஆசை இருந்தது லவ் பண்ண. ஆனா ஒருத்தன மட்டும் தான். அதுவும் கல்யாணத்துக்கு பின்னால தான். அதுக்காக காத்துகிட்டும் இருந்தாள்.
காதல்ல ஜெயிக்கிற கோஷ்டிய விட தோற்கிற கோஷ்டி தான் அதிகம். அதிலும் அந்த ஜெயிக்கிற காதல்ல இருக்கிற உண்மை மேல அவளுக்கு சந்தேகம். அதுக்கு எல்லாம் அவளோட மெச்சூரிட்டி, விஸ்டம் தான் காரணம். ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது பல லவ் பெய்லியர்ஸ் பாத்திருக்காள். அது மூலமா நிறையா கத்துகிட்டாள். சாகுற வரைக்கும் ஒருத்தன மட்டுமே நினைக்கனும் அப்டிங்கறது அவள் கட்சி.

                    இன்னொரு விஷயம், அவள் டிக்சனரிய போலவே காதலுக்கு காதலுக்கு அர்த்தம் பார்க்கிற ஒருத்தன தேடினாள். அதையே அவளோட மனசுக்கு திரும்ப திரும்ப சொல்லிகிட்டாள். அப்படி ஒருத்தன் தான் தனக்கு கணவனா வரணும்னு வைராக்கியமா இருந்தாள். தனக்கு பையன் தேடும்போது பெரிய இன்டர்வியூ ப்ராசஸ், க்வஸ்டினர் எல்லாம் தயார் பண்ணி வச்சிருந்தாள். சக்சஸ்புல்லா 5 பசங்கள ரிஜக்டும் பண்ணினாள்.

                    ஒரே பொண்னாதலால அவளுடைய இஷ்டம் தான் அவள் அப்பாவுக்கும்.
இவ்ளோ க்ளோசா இருந்த அப்பா, ரொம்ப நாள் அவளுக்கு க்ளோசா இருக்க முடியல.
பாலா கல்யாணத்துக்கு 2 வருஷம் முன்னால ரோடு ஆக்சிடண்ட்ல சீரியஸா இருந்து தவறிட்டார். அப்பா பிரிவதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பையனோட ப்ரோபைல தன்னோட பைல இருந்து எடுத்து வரச் சொன்னார். அதில ரத்தக் கரை; அவருடையது தான். ஏதோ சொல்லவந்து சொல்லாமலேயே போயிட்டார். அது தான் சக்தி. அவனுடைய ப்ரோபைல் தான் அது. ஜோசியர் கிட்ட பொருத்தம் பாத்து மஞ்சள் தடவி இருந்த அதை ரத்தம் சேத்து மகள் கைல குடுத்துட்டு போயிட்டார்.

                    சக்தி வேலன் என்கிற சக்தி. கால ஓட்டத்தில மறந்து போன அப்பாவோட நெருக்கமான பால்ய சிநேகிதரோட பையன். மகளுக்கு வரன் பார்க்கையிலே தன்னோட பழைய நண்பன கண்டுபிடிச்சதுல அப்பா ரொம்ப சந்தோசப்பட்டதா பிறகு சக்தியோட அப்பா சொல்லியிருக்கார்.

                    அப்பாவோட இழப்புக்குப்பிறகு ஆறு மாசம் கழிச்சு, சக்தி அப்பாவோட முயற்சியால, மறுபடியும் கல்யாணத் திட்டம் பாலா முன் வந்தது. சக்தி அப்பா இப்ப பாலாவோட கார்டியன் ஆகிட்டார். சக்தி அப்பா பத்தி பல வருசங்களுக்கு முன்னால அப்பா நிறைய சொல்லிருப்பதாக அம்மா சொன்னாங்க. பாலாவுக்கு ஒரு சங்கடமான நிலைமை தான். ஆனாலும், தான் சந்தோசமா இருபத தான் அப்பா விரும்புவார்னு அவளுக்கு தெரிந்தது. அஞ்சு பசங்கள ரிஜக்ட் பண்ணியும் அப்பா எதுமே சொல்லல. பாலா விருப்பம் போல விட்டுட்டார். இப்ப அப்பா மேல இருக்கிற அன்பு , நம்பிக்கை, மரியாதையால சக்திய பத்தி எதுமே விசாரிக்காம கல்யாணத்துக்கு சம்மதிச்சாள் பாலா.

                    பாலா தன்னோட வைராக்கியம் , ஆசை , எதிர்பார்ப்பு இவையெல்லாம் அப்பாவோட காலடிக்கு போயிடுச்சுன்னு நினச்சுகிட்டாள். சந்தோசம் தான் அவளுக்கு சக்திய கல்யாணம் பண்ணிகிட்டதுல. ஆனா பின்னொரு நாள் வருத்தப்பட கூடாதுன்னு நினைச்சாள். பயந்தாள். இப்ப அதே பயத்தோட தான் சக்திகிட்ட பேச போறாள்.

                    அவளா பேச நினைக்கல. கல்யாணம் முடிஞ்ச கையோட, அவளோட தோழி ப்ரியா சக்தி குறித்து ஏதோ சொன்னாள் அதுவும் கல்யாண மண்டபத்திலேயே. அத பாலா உதாசினப்படுத்தினாள்.  சின்ன வயசில இருந்து எதுலேயும் போட்டி தான் பாலாவுக்கும் ப்ரியாவுக்கும்.

                    திருமணம் முடிந்து. இனிதே தொடங்கியது புது வாழ்வு. ரெண்டு பேருமே மற்றவங்கள பத்தி ரொம்ப தெரிஞ்சுக்க, ரொம்ப புரிஞ்சுக்க ஈடுபாடு காட்டல. பரிவு இருந்தது. நேசமும் இருந்தது. காதல்கள் மிக வெளிப்பட இல்லை. ஸ்பரிசங்கள் தெரிந்தன. இரவுகள் கடந்தது. ஊடல்களுக்கு வாய்ப்பில்லை. அமைதியாவே போனது. சுனாமிக்குப் பின் வந்த அமைதிய போல.

                    அடுத்து ஒரு முறை, கல்யாணத்துக்கு பிறகு ஆறு மாசம் கழிச்சு, ஆபிஸ்ல சக்தி பாலாவ ட்ராப் பண்ண வரும்போது, அவளோட லஞ்ச மேட் சொன்னது நிஜமாவே அதிர்ச்சியா இருந்தது. இதுகெல்லாம் பிறகு இன்னும் ரெண்டு பேர் சக்திய குறித்து பாலா கிட்ட பத்தி வைக்க, அவளால அமைதியா இருக்க முடியல. அது சந்தேகம் இல்ல. தன்னோட இயலாமைன்னு நினைச்சுகிட்டாள். தன்ன யாரும் ஏமாத்தலை, ஆனா தான் எமாந்துட்டதா நினைச்சுகிட்டாள். இத பத்தி தான் எக்ஸ்ப்லனேசன் கேக்கலாம்னு சக்திய அப்ரோச் பண்ணினாள் பாலா.

பகுதி II விரைவில். . .