பிம்பம்

"அவளைக் காண்பதை தன் தினசரி 'வேலைகளில் ஒன்றாக' வைத்திருந்தான் கார்த்திக்" என்று சொன்னால் அது அபத்தம். பேருந்து நிறுத்தத்தில் மதியை காணாமல் அவனால் வேலைக்குச் செல்ல முடியாது. அவளைக் காணாததனால் அலுவகத்திற்கு விடுப்பு எடுத்ததும் உண்டு.

அவன் பிற ஆண்கள், பெண்களை நோட்டம் விடுவதைப் போல அவளைக் காண்பது கிடையாது. அவன் பார்வையில் காதல்... காதல் மட்டும் தான். அவனுக்கு தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெறாத ஒன்றை அவளிடமிருந்து கிடைக்கப் போவதாக உறுதியாக இருந்தான்.

இந்திந்த காரணங்களினால் தாம் காதல் வரவேண்டும் என தமிழ் முன்னோர் எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. அவ்வாறு எழுதி வைத்திருந்தாலும் அவனால் காரணம் கூற இயலாது. எழுதி வைக்காதிருத்தலுக்கு அவர்களையும் நம்மால் குறை கூற இயலாது. பாவம், அவர்களும் அறிந்திருக்க மாட்டார்கள் போல.

பிறக்கும் முன்னே குடிகார தந்தையையும், ஐந்து வயதில் தாயையும் இழந்த அவனுக்கு சாமி கும்பிட கூட எவரும் சொல்லிக் கொடுத்தது கிடையாது.

என்றாவது ஒருநாள் மதியின் அன்பு, பாசம், காதல் கிடைக்கும் என்றிருந்தான், கார்த்திக். இவற்றிற்கும் மேல் ஒன்றுகூட அவன் இறைவனிடம் வேண்டியது இல்லை, அவளைக் கண்ட நாள் முதல் அல்லது அவன் சாமி கும்பிட ஆரம்பித்த நாள் முதல்.

அன்றும், என்றும் போல மதியை கண்டு கொண்டே சாலையை கடக்க முயற்சித்த போது அது நடந்தது. அவன் விழி மூடும் போது, அதன் மணியில் கடைசியாய் பதிந்த பிம்பம் மதியினுடையதாய் தான் இருந்திருக்க வேண்டும்.

அவனுக்காக பதறிய மனம் மதியினுடையதாய் இருந்தது. அவன் தாய் கூட மேல்லோகத்தில் அவனைக் கண்டு இவ்வளவு பதறியிருக்க மாட்டாளோ?.

அன்று இரவு மதியின் தலையணையை அவள் விழி நீர் நனைத்தது. தானும் கொண்டிருந்த வெளிப்படுத்தாத காதலால் தான் அவனுக்கு இந்த கதி என்ற குற்ற உணர்ச்சி அவளை சாகடித்து.

மீண்டும் கண்விழித்த போது அவன் விழியில் விழுந்த பிம்பமும் மதியினுடையதாய் தான் இருந்தது, மறுநாள் காலை மருத்துவமனையில்.

2 comments:

Gowripriya said...

good one.

Sateesh said...

மழைல நனைய வைக்காதிங்க :)